7 February 2013

உருகிக்கொண்டிருக்கிறேன்.

 
 
இறுகிக்கிடக்கிறேன் என்பதாலேயே 
உணர்வற்றுக்கிடப்பதாய் உள்ளர்த்தம் கொள்கிறாய்!
முகமெதிர்கொள்ள விரும்பாது,
முன்னிலையில் நில்லாக்காரணத்தால்
முதுகெலும்பில்லாதவன் என்றே
ஏறி மிதித்தென்னை  ஏளனம் செய்கிறாய்!
 
நினைவில் வைத்துக்கொள்,
ஆவியாய்ப் போனாலும் ஆயுள் நீடிக்கும்
நீரைப் போன்றவனே நானும்!.
பனியாய் உறைந்திருக்கிறேன்  இன்று!
பாறையாய் அன்று!
 
உமிழும் சுடுசொற்களால்
பெரும் உக்கிரம் பெற்று
உருகிக்கொண்டிருக்கிறேன் உள்ளே!
வலிந்து உதைக்கும் பாதங்களை
வெடுக்கென்று பற்றியிழுத்து
உள்வாங்கும் நாளொன்று உருவாகுமுன்னே  
தாக்குதல் விடுத்து
தற்காத்துக்கொண்டு ஓடிவிடு!

42 comments:

 1. உருகினாலும் தப்பில்லைங்க.., அப்போதானே நதியாய் ஓடி, அருவியாய் கொட்டி, பயிருக்கு உய்ரி தந்து, உயிரின் தாகம் தணித்து, கடல் சேர்ந்து முத்து, உப்பு, கடல்வாழ் உயிரினதுக்கு அன்னையாய் மாறி, ஆவியாகி மழையா மண்ணில் வந்து மீண்டும் உருகலாம்

  ReplyDelete
 2. உருகிக் கொண்டிருப்பதால் தான் இன்றைய உலகிற்கு பெரும் ஆபத்து...

  ReplyDelete
 3. ஹப்பா... எங்க எழுதறதை நிறுத்திட்டீங்களோன்னு பயந்துட்டிருந்தேன் தோழி! சற்றே இடைவெளிக்குப் பின் அழகான கவிதையோடயும், ரசனையான வலைத்தள டிசைனோடயும் உங்களைப் பாக்கறதுல ரொம்ப்ப்ப ரொம்ப்ப்ப சந்தோஷம்! தொடர்கிறேன்!

  ReplyDelete
 4. புதிய கட்டமைப்பு நன்றாக உள்ளது கீதா ...
  பாறை பனியாகிறதே..அடடே..ஆச்சர்யக்குறி...!ஹஹஹ
  இடைவெளி வேண்டாம் தொடருங்கள்

  ReplyDelete
 5. அழகான கவிதை. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 6. மனதை உருகவைத்து உள்வாங்கிய கவிதை. ;)))))

  ReplyDelete
 7. கவிதை அருமை கீதமஞ்சரி.
  மறுபடியும் எழுத நேரம் கிடைத்து விட்டது அறிந்து மகிழ்ச்சி.

  ReplyDelete

 8. வலையில் சில நாட்களாகக் காணோமே. நலம்தானே. தொடர்பு கொண்டு கேட்கலாம் என்றால் முகவரி தெரியாது. மேலும் உங்கள் ப்ரைவஸியில் குறுக்கிடுவதாகத் தோன்றலாம். மீண்டும் பதிவைப் பார்க்க மகிழ்ச்சி. பனி உருகுவது தேவை. அதிகம் உருகுவது பாதிப்பு. இரண்டு கருத்துக்களுமே வந்து விட்டன. யாருடைய கடுஞ்சொற்கள். யாரிடம் இந்தக் கோபம். சற்றே தெளிவாக இருந்தால் அனாவசியமாக எதையும் தவறாகக் கற்பனை செய்ய வேண்டாமே. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. நீண்ட நாளுக்கு பிறகு நல்ல கவிதையுடன் வருகை தந்தமைக்கு வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!

  ReplyDelete
 10. அருமையான வரிகள்.

  ReplyDelete
 11. சாது மிரண்டால் காடு கொள்ளாது.....

  அருமை... அருமை...
  கவிதையில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (19.02.2013) உங்கள் வலைப்பதிவினை அறிமுகம் செய்து எழுதியுள்ளேன். தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

  ReplyDelete
 13. மறுமொழி > sury Siva said...
  உங்கள் வருத்தத்தை அப்படியே நகலெடுத்து அவருடைய பதிவில் பதிந்துள்ளேன். அவர் ( கீதமஞ்சரி) பதில் தருவார்.

  //sury Siva said...

  கீதமஞ்சரி அவர்களின் பொன்மலைப்பற்றிய பதிவொன்றில் பின்னூட்டம் ஒன்று இட்டிருந்தேன்.
  எல்லாவற்றிற்கும் பதிலளித்த ஆசிரியை என்னை மட்டும் மறந்து போனார்.
  இருந்தாலும் இன்னமும் பொன்மலையை என்னால் ( சார், எங்களால்) மறக்க முடியவில்லை.

  சுப்பு தாத்தா.
  மீனாட்சி பாட்டி.
  February 19, 2013 at 8:11:00 PM GMT+05:30 //  ReplyDelete
 14. மன்னிக்கவேண்டும் தி.தமிழ் இளங்கோ ஐயா. சமீப காலமாக தவிர்க்க இயலாத சில பணிச்சுமைகளால் என்னால் வலைப்பதிவுப் பக்கம் வர இயலவில்லை. அதனால் எனக்குக் கருத்திட்டப் பலருக்கும் பதில் அளிக்கவோ, பலருடைய பதிவுகளைப் படிக்கவோ இயலாமல் தவிக்கிறேன். அதற்காக என் வருத்தங்கள். விரைவில் வந்து வலையுலகில் சங்கமிப்பேன். என் பதிவைக் குறிப்பிட்டு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு மனம் நிறைந்த நன்றிகள். வலை அறிமுகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சக பதிவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.

  சுப்புத்தாத்தா அவர்களுடைய பதிவை என் கவனத்துக்குக் கொண்டுவந்தமைக்கு மிகவும் நன்றி. அவர்களுடைய வருத்தத்தைப் போக்கவேண்டியது என் கடமை.
  அன்பான சுப்புத்தாத்தா,
  பொன்மலை பற்றிய என் பதிவில் தங்களுடைய நெகிழவைத்தப் பின்னூட்டத்துக்கு நான் உடனே பதிலளித்திருந்தேன். என்னுடைய வலைப்பூவில் முதலில் இருந்த டெம்ப்ளேட்டில் ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் கீழே பதிலளிக்கும் வசதி இருந்தது. ஒவ்வொரு கருத்துக்கும் கீழே பதிலளித்திருந்ததால் நான் எவர் கருத்தையுமே மேற்கோளிடவில்லை. மேற்கோளிட்டு பதிலளித்திருந்தால் இந்த ஐயம் வந்திருக்காது. இடையில் வேறு வேறு டெம்ப்ளேட் மாற்றியதில் அந்த வசதி போய்விட்டது. எல்லாப் பின்னூட்டங்களும் பதிந்த நேரம், தேதியின் அடிப்படையில் ஒன்றின்கீழ் ஒன்றாக மாறிவிட்டன. உங்களுக்கு நான் அளித்திருந்த பின்னூட்டமும் அப்படி இடம் மாறிவிட்டது. மன்னிக்கவும். தங்களுடைய அழகான நெகிழவைத்தக் கவிதைப் பின்னூட்டத்தையும், அதற்கு நான் அளித்திருந்த பதிலையும் இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன்..
  தங்களுடைய கவிப்பின்னூட்டம்….

  \\திருச்சி மலைக்கோட்டை படத்தைப் போட்டு,
  திரும்பி வாரா அ ந் நாட்களை எல்லாம்
  திடுக் எனவே என் கண்முன்னே
  திருப்பி வைத்து விட்டீர்களே !!

  அந்தக் காலத்து ஆண்டார் தெரு
  ஆலமரம் ஒன்று அமைதியாய் வானளாவ
  அதன் முன்னே கருப்பண்ண சாமி ஒன்று குடியிருந்து
  ஆண்டாண்டு காலமாய் காத்து வரும் வீதியது.

  ஆடி பதினெட்டில்
  தேடி வரும் காவிரி வெள்ளம் .
  தைப்பூசத்திரு நாளில்
  தெருவெல்லாம் பக்தர் வெள்ளம் !!

  சித்திரை முதல் நாளில் நம்
  நித்திரை கலையுமுன்னே
  பித்துக்குளி முருகதாசின்
  நாலு வீதி ஊர்வலம்.


  காவேரி கரையங்கே என் பள்ளி. தெப்பக்
  குளமருகே என் கல்லூரி.
  கனிவே உருவான என் முதல்வர்.
  கடமையில் கண்ணாவார், எர்ஹார்ட் ஃபாதர்.
  இலக்கியத்தைப் பேச வந்த அதே நேரத்தில்
  நேயத்தையும் ஒழுக்கத்தையும் போதித்த ஸெக்யூரா

  எத்தனை சுவைகள் !!
  எத்தனை நினைவுகள் !!
  இத்தனைக்கும் நடுவிலே ....


  காலேஜ் படிக்கும்போதே காதல் வயப்பட்டு
  காலை மாலை பாராது
  கால் வலியும் பாராது
  மலை உச்சி வீதிகளில்
  மனங்கவரந்த அவள் வீட்டருகில்
  வலம் வந்த நேரங்கள், இனி
  வா எனினும் வருமா என்ன ?

  பாலக்கரை நெரிசல் ஊடே
  பொன்மலை ரயில் நிலையம் வந்து
  ஆள் இல்லா பெஞ்ச் ஒன்றில்
  அமர்ந்து பேசிய பேச்செல்லாம்
  அத்தனையும் சத்தியம் எனினும்
  அடுத்த சென்மம் ஒன்றிருந்தால்
  அப்போதுதான் சாத்தியம்.

  சுப்பு ரத்தினம்.\\

  மகிழ்வான என் பதில் பின்னூட்டம்…
  \\ஆஹா.... ஆழ்மனத்தில் உறங்கிக் கிடந்த பல நினைவுகளைத் தட்டி எழுப்பிவிட்டேன் போலும் இப்பதிவின் மூலம். சுமையா சுகமா தெரியவில்லை எனினும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதில் நிறைகிறது மனம். மிகவும் நன்றி.\\

  ReplyDelete
 15. \\ராஜி said...
  உருகினாலும் தப்பில்லைங்க.., அப்போதானே நதியாய் ஓடி, அருவியாய் கொட்டி, பயிருக்கு உய்ரி தந்து, உயிரின் தாகம் தணித்து, கடல் சேர்ந்து முத்து, உப்பு, கடல்வாழ் உயிரினதுக்கு அன்னையாய் மாறி, ஆவியாகி மழையா மண்ணில் வந்து மீண்டும் உருகலாம்\\

  எதையும் நேர்மறையாய் அணுகும் திறன் இருந்தால் வாழ்க்கை சுமையாகவே இராது. உங்கள் பின்னூட்டமும் அதைத்தான் சொல்கிறது. நன்றி ராஜி.

  ReplyDelete
 16. \\திண்டுக்கல் தனபாலன் said...
  உருகிக் கொண்டிருப்பதால் தான் இன்றைய உலகிற்கு பெரும் ஆபத்து...\\

  வரவிருக்கும் ஆபத்தை உணர்ந்தாவது உருக்குவதை நிறுத்த வேண்டுமல்லவா? நன்றிங்க தனபாலன்.

  ReplyDelete
 17. \\பால கணேஷ் said...
  ஹப்பா... எங்க எழுதறதை நிறுத்திட்டீங்களோன்னு பயந்துட்டிருந்தேன் தோழி! சற்றே இடைவெளிக்குப் பின் அழகான கவிதையோடயும், ரசனையான வலைத்தள டிசைனோடயும் உங்களைப் பாக்கறதுல ரொம்ப்ப்ப ரொம்ப்ப்ப சந்தோஷம்! தொடர்கிறேன்! \\

  எழுத நிறைய இருக்கிறது கணேஷ். நேரமும் மனமும்தான் ஒத்துழைக்க மறுக்கின்றன. விரைவில் தொடர்வேன். தங்கள் அன்புக்கு மிகவும் நன்றி.

  ReplyDelete
 18. \\சக்தி said...
  புதிய கட்டமைப்பு நன்றாக உள்ளது கீதா ...
  பாறை பனியாகிறதே..அடடே..ஆச்சர்யக்குறி...!ஹஹஹ
  இடைவெளி வேண்டாம் தொடருங்கள்\\

  ஒற்றை வரியில் எத்தனை அழுத்தமாய் ஆழமாய் உங்கள் கருத்தைப் பதிந்துவிட்டீர்கள். உங்கள் அன்புக்கும் கவிதை, கட்டமைப்பு பற்றியக் கருத்துக்கும் நன்றி ஷக்தி.

  ReplyDelete
 19. \\வை.கோபாலகிருஷ்ணன் said...

  அழகான கவிதை. பாராட்டுக்கள்.

  மனதை உருகவைத்து உள்வாங்கிய கவிதை. ;))))) \\

  தங்கள் வருகைக்கும் கவிதைப் பற்றியப் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி வை.கோ.சார்.

  ReplyDelete
 20. \\G.M Balasubramaniam said...

  வலையில் சில நாட்களாகக் காணோமே. நலம்தானே. தொடர்பு கொண்டு கேட்கலாம் என்றால் முகவரி தெரியாது. மேலும் உங்கள் ப்ரைவஸியில் குறுக்கிடுவதாகத் தோன்றலாம். மீண்டும் பதிவைப் பார்க்க மகிழ்ச்சி. பனி உருகுவது தேவை. அதிகம் உருகுவது பாதிப்பு. இரண்டு கருத்துக்களுமே வந்து விட்டன. யாருடைய கடுஞ்சொற்கள். யாரிடம் இந்தக் கோபம். சற்றே தெளிவாக இருந்தால் அனாவசியமாக எதையும் தவறாகக் கற்பனை செய்ய வேண்டாமே. வாழ்த்துக்கள்.\\

  தங்களுடைய நலம் விசாரிப்புக்கும் கனிவான கருத்துரைக்கும் மனம் நிறைந்த நன்றி ஐயா. நான் நலமே. சில தவிர்க்கவியலா பணிச்சுமையால் தொடர்ந்து பதிவிட இயலவில்லை. விரைவில் தொடர்வேன்.

  ReplyDelete
 21. \\s suresh said...
  நீண்ட நாளுக்கு பிறகு நல்ல கவிதையுடன் வருகை தந்தமைக்கு வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!\\

  தங்கள் வருகைக்கும் வரவேற்புக்கும் பாராட்டுக்கும் மனம் நிறைந்த நன்றிங்க சுரேஷ்.

  ReplyDelete
 22. \\கோவை2தில்லி said...
  அருமையான வரிகள்.\\

  வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி ஆதி.

  ReplyDelete
 23. \\அருணா செல்வம் said...
  சாது மிரண்டால் காடு கொள்ளாது.....

  அருமை... அருமை...
  கவிதையில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள்.
  வாழ்த்துக்கள்.\\

  வருகைக்கும் கவிதைப் பற்றிய விமர்சனத்துக்கும் வாழ்த்துக்கும் அகமார்ந்த நன்றி அருணா செல்வம்.

  ReplyDelete
 24. கீதா... புதிய டெம்ப்ளேட்டில் ரிப்ளை பட்டன் வரவில்லைன்னு நீங்க சொன்னதைப் படிச்சேன். ‘நம்ம’ நண்பன் இந்தப் பதிவுல எழுதியிருக்கறதப் படிச்சுப் பாத்துட்டு செஞ்சீங்கன்னா அருமையா வந்துரும். என் தளத்துக்கு இப்டித்தான் செஞ்சேன்.

  http://www.bloggernanban.com/2012/06/reply-button.html

  ReplyDelete
 25. உங்களுடைய உதவிக்கு மிக மிக நன்றி கணேஷ். உதவி கேட்காமலேயே ஓடி வந்து உதவும் உங்களைப் போன்ற நட்புகள் கிடைத்தமைக்காக மிகவும் பெருமைப்படுகிறேன். விரைவில் நீங்கள் சொன்னபடி செய்து பார்க்கிறேன். உங்களுக்கும் ப்ளாகர் நண்பனுக்கும் மீண்டும் என் அன்பான நன்றி.

  ReplyDelete
 26. தங்களது வலைப்பதிவை இன்றைய வலைச்சரம் (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_7.html ) வலைப்பதிவில் அறிமுகப்படுத்தியுள்ளேன். காண்க.

  ReplyDelete
 27. ''..உள்ளே!  வலிந்து உதைக்கும் பாதங்களை  வெடுக்கென்று பற்றியிழுத்து  உள்வாங்கும் நாளொன்று உருவாகுமுன்னே…  தாக்குதல் விடுத்து

  தற்காத்துக்கொண்டு ஓடிவிடு!..'' மிக வித்தியாசமாக எழுதப்பட்டுள்ளது.
  இனிய வாழ்த்து சகோதரி. நலமா?...
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 28. அரிய கற்பனையுடன் இயற்றிய கவிதை . பாராட்டுகிறேன் . அது உருகிக்கொண்டுதான் இருக்கிறது . புவி வெப்பம் மேன்மேலும் மிகுந்தால்,அது காணாமலேயே போய்விடும் .

  ReplyDelete
 29. வலைப்பதிவு அறிமுகத்துக்கு மனமார்ந்த நன்றி ஐயா.

  ReplyDelete
 30. \\சொ.ஞானசம்பந்தன் said...

  அரிய கற்பனையுடன் இயற்றிய கவிதை . பாராட்டுகிறேன் . அது உருகிக்கொண்டுதான் இருக்கிறது . புவி வெப்பம் மேன்மேலும் மிகுந்தால்,அது காணாமலேயே போய்விடும் .\\

  தங்களுடைய வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 31. \\kovaikkavi said... மிக வித்தியாசமாக எழுதப்பட்டுள்ளது.
  இனிய வாழ்த்து சகோதரி. நலமா?...
  வேதா. இலங்காதிலகம். \\

  நலமே சகோதரி. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

  ReplyDelete
 32. This comment has been removed by the author.

  ReplyDelete
 33. உறைந்து கிடப்பதில் பொறுமையும், உருகி வழிவதில் உக்கிரமும் - மறைந்து கிடக்கும் ஆச்சரியம் கொண்ட பனிமலையைப் போல இந்தக் கவிதை - இமயமலை போல உயர்ந்து நின்று என்னை அண்ணாந்து பார்க்க வைக்கிறது.

  கொஞ்சம் தடுமாறித் தான் போயிருக்கிறேன்.
  என்ன கவிதை இது. அற்புதம் சகோதரி .

  ReplyDelete
 34. நல்ல கவிதை உருகினாலும் தவறு பாரையானாலும் தவறு எதுதான் சரி ?
  உங்கள் ப்ளாகின் கலர் மிக அருமை அமைப்பும் அருமை
  வலைச்சரம் மூலம் வந்துவிடேன் கலந்துளேன் நண்பர் வட்டத்தில் தோழி என்poovizi.blogspot.in

  ReplyDelete
 35. வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

  Visit : http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_20.html

  ReplyDelete

 36. வணக்கம்!

  பனியினைக் காட்டிப் படைத்த கவியில்
  கனியினைக் கண்டு சுவைத்தேன்! - இனியதமிழ்
  உன்றன் உயிர்க்கூட்டில் ஊறுவதால் வாழ்த்துகிறேன்
  என்றன் இதயம் இனித்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 37. @சிவகுமாரன்

  தங்கள் விமர்சனமும் பாராட்டும் கண்டு உள்ளம் குளிர்ந்தேன். நன்றி சிவகுமாரன்.

  ReplyDelete
 38. @malar balan

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி பூவிழி. இனிய வரவேற்புகள்.

  ReplyDelete
 39. @திண்டுக்கல் தனபாலன்

  தங்கள் அன்புக்கும் அறிவிப்புக்கும் மிக மிக நன்றி தனபாலன்.

  ReplyDelete
 40. @கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன்

  கவிமொழியால் கவிதையைப் பாராட்டிய தங்களுக்கு என் இனிய நன்றி ஐயா.

  ReplyDelete
 41. சபாஷ்.. வீர்யமான கவிதை.

  ReplyDelete
 42. @ரிஷபன்

  வருகைக்கும் உற்சாகம் தரும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.