4 September 2012

இனியவன் என் இணையவன்


 
  
என் இதயத்தில் உலாவரும்
என் இணையவனுக்காய் உலாவருகிறது
இணையத்திலோர் இன்கவியொன்று! 
 
என்னோடு ஊடுபவனும் அவனே!
ஊடி, காதல் உறவாடுபவனும் அவனே!
உணர்வினில் ஊடுருவி என்
உயிரணைபவனும் அவனே!
உறவினூடே எனை உயர்த்தி
உளம் நிறைபவனும் அவனே!

 மனையிலமர்த்தியது போதாதென்று
பொன்னரியணையிலும் அமர்த்திட
பொல்லாத ஆசைகொண்டு இழைக்கிறான்
தன் உழைப்பினாலொரு சிம்மாசனம்!
களைப்பின்றி எழுதிக்கொண்டேயிருக்கிறான்
நாளெல்லாம் தன் நேசத்தின் நீள்சாசனம்!
 
குடும்பவிளக்கின் அழகு
கூடத்து இருப்பென்றிருந்தேன்.
குன்றத்து ஒளிர்தலே
பெண்குலத்திற்கு அழகென்றே
மன்றத்திலேற்றிவைத்தான்;
தன் மனதிலும் ஏத்திவைத்தான்!
 
பொருள்வயிற்பிரியும் செயலும்
ஆடவர்க்கியல்பென்றறிந்தும்
இயல்பறுத்தென்னை யாண்டும்
இணைத்தழைத்துச் செல்கிறான்,
லும் எம்மால் எள்ளற்பொறுத்தல்
இயலாது பிரிவின் இன்னற்பொறுத்தலென்றே
இனிதாய் விடைபகர்கிறான்.
 
நாலும் என்னை அறியச் செய்கிறான்,
நானே என்னை அறியச் செய்கிறான்,
நானாய் என்னை இயங்கச் செய்கிறான்,
நாளும் என்னை உவக்கச் செய்கிறான்.
 
எந்நாளும் தன்னலம் மறக்கிறான்,
என்னலத்தைத் தன்னலம் என்கிறான்,
என்னுறவு தன்னுறவு எனும் பேதமற்று
எவ்வுறவும் நம்முறவு என்று பரிகிறான்.
 
அகிலத்தைச் சுழற்றிவிடுகிறான்,
அழகாய் என் விரல்நுனியில் பொருத்தி!
சகலமும் நீயேயென்று சரணடைகிறேன்,
அவனை என் நெஞ்சத்தில் இருத்தி!
 
தொழில்நுட்ப உலகைப்
பரிச்சயமாக்குகிறான் எனக்கு!
தொல்லையில்லா உலகைப்
பரிசாக்குகிறேன் அவனுக்கு!
வாழ்க்கைப் பாதையின் முட்கள் அகற்றியபடி
முன்னால் நடக்கிறான் அவன்,
செருக்கோடும் காதற்பெருக்கோடும்
செம்மாந்து பின்தொடர்கிறேன் நான்!
 
என் எழுத்தை வியந்துபோற்றும் வாசகன்!
என் கருத்தை நயந்துவியக்கும் நாயகன்!
என்னால் முடியுமாவென்றே
உன்னி முடிப்பதற்குள்
உன்னால் முடியுமென்றழுந்தச்சொல்லி
உணர்வாலும் செயலாலும் உந்துபவன்! 

அண்ணனும் தம்பியுமாய்
ஆருயிர் தோழனும் தந்தையுமாய்
ஆசைக் கணவனும் காதலனுமாய்
அவனிருப்பே எனக்கு ஆயிரம் படைக்கலம்!
அவன் தயவால்தானே இன்றெனக்கு
அவனியும் அஞ்சறைப்பெட்டியுள் அடைக்கலம்! 
 
அச்சிலேற்றவியலாக் கவிதைகள்
ஆயிரமாயிரம் அவனுக்காய் புனைந்திருந்தும்
எச்சமாயொன்று எழுந்ததேன் இக்கவியரங்கம்? 

இருபதாண்டு நிறைவில் இனிக்கும்
என்மனநிறைவின் பரிசாய் இருக்கட்டுமே
என் மனவாழம் தோண்டிய அன்பின் கவிச்சுரங்கம்!
 *****************************************
(இருபதாவது திருமண நாளை நேற்றுக் கொண்டாடித் திளைத்த மகிழ்வில் எழுதியது)

55 comments:

  1. ada da!
    enna oru urukkamaana varikal!

    arumai!

    ungalai pontra thampathikal -
    vaazhvin munnuthaaranam-
    ennai pontra ilaiyavanukku !

    vaazhthukkal!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அன்பானப் பாராட்டு கண்டு மிக்க மகிழ்ச்சி சீனி. வாழ்த்துக்கு மிகுந்த நன்றி.

      Delete
  2. அருமை வரிகள்...

    /// இருபதாவது திருமண நாளை நேற்றுக் கொண்டாடித் திளைத்த மகிழ்வில் எழுதியது ///

    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கு மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      Delete
  3. எந்நாளும் தன்னலம் மறக்கிறான்,
    என்னலத்தைத் தன்னலம் என்கிறான்,
    என்னுறவு தன்னுறவு எனும் பேதமற்று
    எவ்வுறவும் நம்முறவு என்று பரிகிறான்.//

    அவன் தயவால்தானே இன்றெனக்கு
    அவனியும் அஞ்சறைப்பெட்டியுள் அடைக்கலம்!

    மனம் கவர்ந்த அருமையான வரிகள்
    மனம் தொட்ட பதிவு

    இருபதாண்டு நிறைவில் இனிக்கும்
    என்மனநிறைவின் பரிசாய் இருக்கட்டுமே
    என் மனவாழம் தோண்டிய அன்பின் கவிச்சுரங்கம்!

    இனிய நல் வாழ்த்துக்கள்





    ReplyDelete
    Replies
    1. கவிதை பற்றிய பாராட்டுக்கும் மணநாள் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ரமணி சார்.

      Delete
  4. இருபது ஆண்டுகள் நிறைவாக முடிந்துள்ளதற்கு என் மனமார்ந்த் இனிய நல்வாழ்த்துகள்.
    கவிதையை மிக அழகாகப் புனைந்துள்ளீர்கள். அதற்கு என் பாராட்டுக்கள். vgk

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து மூன்று விருதுகளை வழங்கி எனக்குத் திருமணநாள் பரிசினை முன்கூட்டியே வழங்கிவிட்டீர்கள். மனமார்ந்த நன்றி வை.கோ.சார்.

      Delete
  5. ம் அருமை அனைத்தும் நெஞ்சை தொடும் வரிகள்....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி எஸ்தர்.

      Delete
  6. தோழியின் இல்லறம் நல்லறமாக என் வாழ்த்துக்கள்

    வார்த்தைகளில் காதல் ரசம் வழிகிறது

    கணவன் காதலனாக இன்னும் இருக்கிறான் என்பது பாக்கியம் தோழி

    வாழுங்கள் வாழ்த்துகிறோம்

    ReplyDelete
    Replies
    1. அன்பான வாழ்த்துக்கண்டு அகமகிழ்கிறேன். மனம் நிறைந்த நன்றி சரளா.

      Delete
  7. தோழிக்கு
    ஒரு உண்மை சொல்லனும்ன்னா
    என் மனையாளிக்கு இப்படியானவனாய் இருக்கத்தான்
    மனம் முடிந்த நாள்முதல் முற்பட்டு வருகிறேன்

    அதுபோன்ற ஒரு உறவை இங்கி பார்க்கையில்
    உண்மையில் அகம் மகிழ்கிறது

    இதுதான் உண்ணதமான நேசம்
    இப்படித்தான் வாழனும் தோழி

    என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
    Replies
    1. அன்பான வாழ்த்துக்கு நன்றி செய்தாலி. உங்கள் மனைவியும் கொடுத்துவைத்தவர்தான். இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.

      Delete
  8. நூறாண்டு காலம் வாழ்க ஆல் போல் தழைத்து அருகுபோல் வேரோடி பால்போல் இனிக்க வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. ஐயா, தங்கள் வாயால் வாழ்த்தப்பெறும் பெரும்பேறு பெற்றேன். மிக்க நன்றி ஐயா.

      Delete
  9. Anonymous4/9/12 18:22

    இல்லறம் என்றும் இது போல்
    இனிக்க சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி !

    ReplyDelete
    Replies
    1. அன்பான வாழ்த்துக்கு மனம் மகிழ்ந்த நன்றி தோழி.

      Delete

  10. இல் வாழ்வில் இருபது ஆண்டுகள் இனிதாய் நகர இருக்க வேண்டும் ஒருவருக்கொருவர் என்னும் எண்ணம் இரட்டை மாடுகள் பூட்டிய வண்டிபோல நேராகச் செல்ல இசைந்து இயங்கும் எண்ணங்களும் விட்டுப் பிடிக்கும் குணமும் அவசியம்.இன்னும் பல ஆண்டுகள் நிறைவாய் வாழ வாழ்த்துகிறேன் ( தகுதி இருக்கிறது என்று எண்ணுகிறேன். இல் வாழ்வில் 48 ஆண்டுகள் அன்பிலும் பாசத்திலும் திளைப்பவன் நான்)

    ReplyDelete
    Replies
    1. இல்லற வாழ்வில் பொன்விழா கொண்டாடவிருக்கும் தங்களிடமிருந்து, பீங்கான் விழாக் கொண்டாடும் நாங்கள் வாழ்த்துப் பெறுவதை பாக்கியமாய்க் கருதுகிறேன். மனமார்ந்த நன்றி ஐயா.

      Delete
  11. நாலும் என்னை அறியச் செய்கிறான்,
    நானே என்னை அறியச் செய்கிறான்,
    நானாய் என்னை இயங்கச் செய்கிறான்,
    நாளும் என்னை உவக்கச் செய்கிறான்.
    --அருமை!
    திருமணநாள் வாழ்த்துக்கள்!
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி காரஞ்சன்.

      Delete
  12. திருமண நாள் வாழ்த்துக்கள்! சிறப்பான படைப்பு! நன்றி!

    இன்று என் தளத்தில்
    பேய்கள் ஓய்வதில்லை! பகுதி7
    http://thalirssb.blogspot.in/2012/09/7.html

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுரேஷ்.

      Delete
  13. இதை விட சிறந்த பரிசு இருக்கமுடியாது....

    திருமண நாள் வாழ்த்துகள் சகோ....

    ReplyDelete
    Replies
    1. அன்பான வாழ்த்துக்கு நன்றி வெங்கட்.

      Delete
  14. //இருபதாவது திருமண நாளை நேற்றுக் கொண்டாடித் திளைத்த மகிழ்வில் எழுதியது//

    எவ்வளவு பெரிய விஷயம்.., அதை சிறிய எழுத்துக்களிளா போடுவது சகோ?

    இதயம் நிறைந்த வணக்கங்கள்!

    ReplyDelete
    Replies
    1. அன்புக்கும் பரிவுநிறைப் பின்னூட்டத்துக்கும் நன்றி வரலாற்றுசுவடுகள்.

      Delete
  15. என்றும் என்றும் இதே அன்பு நிலைத்திருக்க என் மனம் நிறைந்த வாழ்த்துகள் கீதா !

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மகிழ்வான நன்றி ஹேமா.

      Delete
  16. என்றென்றும் உங்கள் வாழ்வினில் மகிழ்ச்சியே நிலைத்திருக்க இதயம் நிறைந்து வாழ்த்துகிறேன் தோழி. வழக்கம் போலவே உங்களின் வசந்த வரிகளில் கவிதை ரசனைக்கு விருந்தளித்தது. அருமைங்க.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்தும் பாராட்டும் கண்டு மிக்க மகிழ்ச்சி கணேஷ்.

      Delete
  17. அடடடடா... அருமை அருமை...

    தன் கணவரிம் உள்ள காதலை இவ்வளவு அழகாகக் கவிதையில் சொன்னது சூப்பர். அதைவிட அவரின் பண்புநலங்களை அடுக்கி அடுக்கி வைத்து வார்த்தையில் அசரவைத்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் கீதமஞ்சரி அக்கா.

    இன்னும் நீங்கள் பொன்விழா காண அன்புடன் மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கவிதையைப் பாராட்டியதோடு பொன்விழா காண அன்புடன் வாழ்த்திய உங்களுக்கு மனமார்ந்த நன்ற அருணாசெல்வம்.

      Delete
  18. Anonymous7/9/12 06:22

    இனிய இருபதாண்டு திருமணநாள் வாழ்த்து.
    பல அழகு வரிகள் கொண்ட கவிதை.
    நல்வாழ்த்து.
    என்பக்கம் வர எந்தத் தடையுமில்லை.
    நல்வரவு.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கு நன்றி தோழி. தங்கள் வலைப்பக்கம் வரக்கூடாது என்றில்லை. பலருடைய தளத்துக்கும் முன்போல் போகமுடிவதில்லை. கொஞ்சம் பளு குறைந்ததும் நிச்சயம் வருவேன். அழைப்புக்கு நன்றி.

      Delete
  19. Anonymous7/9/12 11:54

    வாழ்த்துக்கள் அக்கா அருமையான படைப்பு....

    ReplyDelete
    Replies
    1. அன்பான வாழ்த்துக்கு மிகவும் நன்றி எஸ்தர்.

      Delete
  20. இயலும் எம்மால் எள்ளற்பொறுத்தல்
    இயலாது பிரிவின் இன்னற்பொறுத்தலென்றே//

    அண்ணனும் தம்பியுமாய்…
    ஆருயிர் தோழனும் தந்தையுமாய்…
    ஆசைக் கணவனும் காதலனுமாய்…
    அவனிருப்பே எனக்கு ஆயிரம் படைக்கலம்!
    அவன் தயவால்தானே இன்றெனக்கு
    அவனியும் அஞ்சறைப்பெட்டியுள் அடைக்கலம்!//

    ம‌ன‌ம் க‌னிந்த திரும‌ண‌நாள் வாழ்த்துக‌ள் தோழி!!
    இன்று போல் என்றென்றும் இன்ப‌மாய் வாழ‌ இறைய‌ருள் நிலைக்க‌ட்டும்!!


    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பான வாழ்த்து கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி நிலாமகள்.

      Delete
  21. மணநாள் வாழ்த்துக்கள் . கொடுத்து வைத்தவர்கள் இருவரும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி சிவகுமாரன்.

      Delete
  22. வாழ்த்துக்கள் தோழி வளமான வாழ்வு அது என்றும்
    இனிதாக அமைய என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் .
    கவிதை அருமையாகத் தொடுத்துள்ளீர்கள் .மன்னியுங்கள்
    தோழி தங்களை நான் பின் தொடரமால் இத்தனை நாள்
    இருந்துள்ளேன் .அதிஸ்ட வசமாய் வாழ்த்துச் சொல்ல
    கிட்டிய சந்தர்ப்பம் இது !....மகிழ்வாய் உள்ளது .

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகையும் கருத்தும் கண்டு மிகவும் மகிழ்ச்சி தோழி. தங்கள் அன்புக்கு மிகவும் நன்றி.

      Delete
  23. வாழ்த்துக்கள். big milestone.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி அப்பாதுரை சார். திரும்பிப் பார்த்தால் மலைப்பாகத்தான் உள்ளது.

      Delete
  24. வணக்கம்

    இருபதாண்டு நிறைவெண்ணிப் பாடி வைத்த
    இன்கவிதை இனியவனை வணங்கு கின்றேன்!
    பெருகமீண்டும் பூத்தாடும் இளமைக் காலம்!
    பேரின்பம் அளிக்கின்ற அழகின் கோலம்!
    தருகயாண்டும் தண்டமிழின் இன்றேன் ஊறும்
    சால்புடைய அருங்கவிகள்! கதைகள் யாவும்!
    வருகஈண்டு பாரதியென் வலையைக் காண!
    வளா்கீத மஞ்சரியே! வாழ்க!வாழ்க!

    கவிஞா் கி.பாரதிதாசன்
    தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
    http://bharathidasanfrance.blogspot.fr/
    kavignar.k.bharathidasan@gmail.com
    kambane2007@yahoo.fr


    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் அழகிய வாழ்த்துப்பாவுக்கும் மனமார்ந்த நன்றி ஐயா. தங்கள் வலைத்தளம் கண்டு மகிழ்ந்தேன். விரைவில் அங்கு கருத்திடுவேன்.

      Delete
  25. மணநாள் வாழ்த்துக்கள் கீதமஞ்சரி. இனிமையான பல மணநாட்கள் இதுபோல காண என் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்பான வாழ்த்துக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி இமா.

      Delete
  26. வாழ்த்துகள் கீதமஞ்சரி! 20 ஆண்டு காதல் வாழ்கையில் உங்கள் கணவருக்கு அற்புதமான கவிதை பரிசு அளித்து அசத்தி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கும் அழகானக் கருத்துரைக்கும் நன்றிங்க முரளிதரன்.

      Delete
  27. வாழி! நலம் சூழ!!
    என்றே வாழ்த்துகிறேன்: வாழ்க!
    வருடம் ஒருநாள்
    வருகின்ற திருநாள்
    வாழ்வினில் பலமுறை வரவே!

    வாழி! நலம் சூழ!!
    என்றே வாழ்த்துகிறேன்: வாழ்க!!

    மனம் நிறந்த வாழ்த்துக்கள் கீதா.இருவருக்கும்.

    இன்றுபோல் என்றும் வாழ்க!எங்கள் (இணைய)வீட்டுத் திருமகளே! வாழைத் தண்டு போல தலைவன் பக்கம் நின்றிருக்கும் குலமகளே!

    ReplyDelete
  28. பாட்டாலே வாழ்த்தி அசத்திவிட்டீர்கள் மணிமேகலா. மிக மிக மகிழ்வான நன்றி.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.